யாரிட்ட சாபமோ?----------------------------- முகுந்தமுரளி
தற்பொழுது இலங்கையில் நடைபெறும் மக்களின் போராட்டம் என்பது தன்னெழுச்சியாக எழுந்ததென வர்ணிக்கப்பட்டாலும், பின்னணியில் மறைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரல் ஒன்றேயுள்ளது. அங்கு போராடுபவர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் அன்றாடங்காச்சிகள் தங்கள் குடும்பத்தைக் காக்க வாழ்வைக் காப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதேவேளை தமிழ் பிரதேசம் அமைதியாக விளங்குகிறது. தமிழர்கள் யாரும் தன்னெழுச்சியுடன் போரடவில்லை. இருப்பினும் ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சியை விட்டே துரத்தி அடிப்போம் எனக் கோசமிட்டு தமிழர்களையும் இப்போராட்டத்தில் ஈடுபடுத்த முற்பட்ட தமிழ் அரசியல்வாதிகளின் முயற்சியும் பலனளித்ததாகத் தெரியவில்லை.
இக்களநிலையில் தெற்கில் மக்கள் எதிர்ப்பில் தம்மையும் இணைத்துள்ள பெரும்பான்மையினத்தவரில் சிறுபகுதியினர் தமிழர்களின் பிரச்சனைகளை அவர்களுக்கான நியாயங்களை பேசமுன்வந்துள்ளனர். அதேவேளையில் தமிழ் மக்களின் போராட்ட மறுப்பு மனோநிலையானது தமக்கு அநீதி நடந்து கொண்டிருந்தபொழுது அதனைக் கொண்டாடியவர்களே தமக்குள் போராடுவதை கண்டுகளிக்கும் நிலையில் இருக்கின்றார்களா என்றால் அதுவுமில்லை. அவர்கள் கடந்த காலங்களில் தம்மீது பொருளாதாரத் தடையை சிறீலங்கா அரசு விதித்த பொழுது தாம் எதிர்கொண்ட அனுபவங்களில் இருந்தும், பட்ட உச்சக்கட்ட துயரங்களில் இருந்தும் பெற்ற மனோநிலையில் எதுநடந்தாலும் நடக்கட்டும் எனும் ஒரு மனோபாவத்துடன் காணப்படுகின்றார்கள்.
ஒருபுறம் உக்ரைன் ரஷ்யப் போரானது உக்கிரமடைந்து கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் உலகம் முழுவதும் பஞ்சம் வருவதற்கான ஒரு சூழ்நிலையையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இது தொடர்பாக செக் குடியரசு நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் “உக்ரைன் போர் காரணமாக மனித இனத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமான மக்கள் அல்லது 170 கோடி மக்கள் பசி,பட்டினி மற்றும் வறுமைநிலைக்கு தள்ளப்படுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார். கனடாவிலும் அத்தியாவசியப்பொருட்கள் அனைத்தும் 6.7 விகிதத்தால் விலை அதிகரிப்பைச் சந்தித்துள்ளன.
இலங்கையில் வரப்போகின்ற மாதங்களில் காசு இருந்தாலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்க முடியாத பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருப்பதாக வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. நான்கு மாதங்களுக்குள் மிகப்பெரிய கொடிய பஞ்சநிலையை முகம் கொள்ளப் போகின்றார்கள் மக்கள்.
இலங்கை விவகாரங்கள் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் வியூகங்களிற்குள் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் விவகாரமும் தேவைகருதியே கையாளப்படப் போகின்றது. இருபகுதியும் சேர்ந்து முடிவிற்கு கொண்டுவருமா? அல்லது முட்டிமோதி நிற்குமா என்பதும் கேள்விக்குறியே?
இலங்கை இந்தியாவின் மாநிலமாகும் என்ற கட்டுக்கதை ஒரு புறம் என்றால் மறுபுறம் இலங்கை எதிர்கொண்டுவருகிற பல சிக்கல்களுக்கு குவேனி அன்று இட்ட சாபம் தான் என்று சிங்கள சமூகத்தில் வேரூன்றியுள்ள மரபுவழிக்கதைகள் வழி ஆய்வுகளும், விவாதங்களும் ஆட்கொள்கின்றன.
மோசமான துட்டச் செயல்களில் ஈடுபட்ட வங்க இளவரசன் நாடுகடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்து குவேனியுடன் காதல் வயப்படுகிறான். இத்தகைய துட்ட விஜயன் அங்கிருந்த இயக்க இனத்தவர்களை அழிக்கத் தொhடங்குகிறான். தன் இனத்தவைர்களை அழிப்பதற்கு காதல் மயக்கத்தில் இருந்த குவேனியும் துணைபோகிறாள். விஜயனுடன் வந்து இறங்கிய அவனுடைய 700 நண்பர்களும் இலங்கையில் குடியேறி பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகி அப்பகுதிகளை உள்ளடக்கிய இராச்சியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனைக் கோருகிறார்கள்.
சிம்மாசனம் ஏறுமுன் ராசவம்சத்து பெண்ணை மணந்து கொள்ளவேண்டும் என்று விஜயனிடம் கேட்டுக்கொள்கிறார்கள். அதை நிறைவேற்றும் பொருட்டு விஜயன், ஒரு இளவரசியை மணந்து கொள்வதற்காக விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு சென்று, அங்கு மன்னருக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். கூடவே ஆயிரக்கணக்கான ஊழியர்களும் சேர்த்து அனுப்பப்படுகிறார்கள்.
மணமாகப்போகும் விஜயன் குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு" என்று கூறுகிறான். வேதனையும், விரக்தியும் அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுர" என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். குவேனி எவரும் இல்லாமல் தனித்து அனாதையாக விடப்படுகிறாள். இந்தத் தனிமையும், துரோகமும் குவேனியை விரக்திக்கும். வெறுப்பின் உச்சத்துக்கும் தள்ளுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் தான் குவேனி சபிக்கிறாள். அவள் வழங்கியதாக மொத்தம் ஒன்பது சாபங்கள் கூறப்படுகின்றன.
• இலங்கைத் தீவு நான்கு திசைகளாலும் அழிக்கப்படட்டும்: இந்த சாபத்தின் போது குவேனி மானகந்தா நீரூற்றில் இருந்து பாயும் நீரில் தலைமயிரை சேர்த்து இலங்கைக் கடலின் நான் திசையிலும் வீசினாள். நாற்திசையாலும் அழிவு எட்டட்டும் என்பத அந்த சாபத்தின் சாரம்.
• இலங்கையின் தலைவர்கள் அழிந்து போகட்டும் இச்சாபத்தின் படி இலங்கைக்கு யார் எல்லாம் தலைமை கொடுக்கிறார்களோ அவர்கள் அழிந்து போகட்டும் என்பதே. (இங்கு இலங்கை என்று குறிப்பிட்டாலும் சிங்கள “நூல்களில் இது சிங்கள இனம்” என்றே குறிப்பிடப்படுகிறது)
• அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு சிக்கட்டும்: இந்த சாபத்தில், அந்நிய நாடுகளின் ஆக்கிமிப்புக்கு உள்ளாகி நாடு நாசமாகட்டும் என்று சபிக்கிறார்.
• ஹெல இனம் இரத்தத் தூய்மை இழந்து தனித்துவத்தை இழக்கட்டும் : இனத்தூய்மை இழந்து. ஒருவரை ஒருவர் சாக்காட்டுங்கள் என்கிறது இந்தச் சபிப்பு.
• ஹெல தீவு இரண்டாகப் பிளந்து கடலுக்குப் பலியாகட்டும் : இந்த சாபத்தின் மூலம் இலங்கை இரண்டாக உடைந்து இறுதியில் சமுத்திரத்தில் மூழ்கட்டும் என்கிற சாபம்.
• அறிவில்லாத இனம் தோன்றட்டும் : இலங்கையில் அறிவீனமான இனம் தோன்றட்டும் என்கிறது இந்த சாபம்.
• சூரியன், மழை, காற்று, கடல் மற்றும் நீர் என்பவற்றால் அனர்த்தங்கள் வரட்டும் : சூரியன், மழை, காற்று, கடல், நீர் என்பவற்றால் எப்போதும் அனர்த்தங்களுக்கு சிக்கலாகிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சபித்தாள்.
• நோய்களோடே இருக்கக் கடவது : குணமடைய முடியாததும் விரைவாக பரவக் கூடியதுமான நோய்களுக்கு எப்போதும் ஆளாகிக்கொண்டிருக்கட்டும்.
• சிதைந்து சீரழிகின்ற இனமாக ஆகட்டும் : குவேனியின் சாபம் என்னவென்றால், கடலில் மிதக்கும் மரக் குச்சி அலைகளுக்கு அகப்பட்டு இங்குமங்குமாக எந்த இலக்குமில்லாமல் இறுதியில் மூழ்கிவிடுவது போல எந்தக் கொள்கையும் இல்லாத மக்கள் இலங்கையில் உருவாகட்டும்.
உண்மையில் இந்தச் சாபம்தான் இலங்கையைச் சீரழிக்கின்றது எனப் பௌத்த மரபைப்பேணும் பெரும்பான்மையினரில் ஒரு பகுதி தீவிரமாக நம்புகின்றனர். ஏன்? குவேனியின் இனத்தவர்கள் அழிக்கப்பட்ட பொழுது அவர்களிட்ட சாபமாகக் கூட இருக்கலாம் அல்லவா?
போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களோ ஆட்சி மாறினால் இந்தக் காட்சி மாறிவிடும் என்று தவறாக நம்புகின்றார்கள். ஆட்சிமாறினாலும் இந்த அவலநிலையில் இருந்து உடனடியாக மீட்சி கிடைத்து விடப்போவதில்லை. பொருளாதாரம் சீரடைய காலமெடுக்கும். பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியலின் நகர்வுகளைப் புரிந்து கொண்டவர்கள் இப்பொழுது தமிழர்கள் விடயங்களுக்கு பொதுசனவாக்கெடுப்பு நடத்துவது பற்றிப் பேசுவதற்குரிய நேரம் இல்லை என்பதையும் ஆனால் தமிழர்களுக்கு இது ஒரு சாதகமான காலகட்டம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இன்னும் 20 நாட்களில் மே 18 …. தாயகத்தில் நடைபெறப்போகும் முள்ளிவாய்க்கால் பேரழிவு நினைவுகூரப்படுவதை இம்முறையும் இச்சிக்கல்களினிடையேயும் இலங்கை அரசு தடைசெய்யுமாயின், தமிழர்கள் மேல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுமாயின் அதன் விளைவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே என் சிந்தனை முள்ளிவாய்க்காலையும், எம் தாயக உறவுகளையும் நோக்கியே செல்கிறது. குவேனியின் சாபமல்ல அதர்மமாக அவலமாக கொல்லப்பட்ட தமிழ் உறவுகளின் சாபமே இன்று இலங்கையை மட்டுமல்ல முழு உலகையும் நிலைகுலைய வைத்துள்ளது. அதர்மம் அழிவதும் தர்மம் வெல்வதும் இயற்கை நியதி! காத்திருந்து பார்ப்போம்!
No comments:
Post a Comment